30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனின் பிறந்த நாள் இன்று. தமிழ் வட்டார நாவலின் முன்னோடியான அவரின் படைப்புலகப் பயணத்தை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டம் கூட்டப்பள்ளியில் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 15 இல் பெருமாள் முருகன் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே வாசிப்பைத் தொடங்கிய அவர், முதலில் கவிதைகளின் வாயிலாக தனது எழுத்துலக வாழ்வை தொடங்கினார்.
கல்லூரிக்காலத்தில் அவர் எழுதிய “நிகழ்வு” எனும் சிறுகதை முதன் முதலில் கணையாழியில் பிரசுரமானது. தொடர்ந்து கணையாழி, தாமரைக்கு கதைகள் எழுதினார்.
‘மனஓசை, பாலம், தலம், சுபமங்களா, காலச்சுவடு இதழ்களில் தொடர்ந்து எழுதிய பெருமாள் முருகன், அவர் எழுதி வெளியிட்ட முதல் நூல் ‘ஏறுவெயில்’ நாவலாகும்.
பெருமாள் முருகன், கல்லூரிப் படிப்புக்கு பின்னரே எழுத வந்து, இதுவரை 40 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
அதில் 11 நாவல்களும் அடங்கும். அவர் படைப்புகளில் அதிகமாக மிளிர்பவை கொங்கு மண் சார்ந்து நிற்கும், குறிப்பிட்ட சமூக மக்களின் அவலம் குறித்துத்தான். இவரது மூன்றாவது நாவலான ‘கூள மாதாரி’ ரொம்பவும் பேசப்பட்ட படைப்பு.
கொங்கு மண்ணின் நிலமும், நிலம் சார்ந்த மக்களின் உழைப்புமான வாழ்க்கை, ஒவ்வொரு சமூகத்துக்கும் தொடர் சங்கிலியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மண் சார்ந்த நாவலில் உழைக்கும் மக்கள் நிறையும்போது, அதில் மிகுதியாக உள்ளவர்களுக்கான வலி என்பது வலிமையாக ஒலிப்பதையே தனது குரலாக ” கூளமாதாரி ” நாவலில் பதிவு செய்துள்ளதாக அவரே குறிட்டுள்ளார்.
நாவல் என்பது வாழ்க்கையும், புனைவம்சமும் கற்பனையும் கூடிய படைப்புச் செயல்பாடு என்று கூறும் பெருமாள் முருகன் தமிழ் வட்டார மொழி இலக்கியத்திற்கு தவிர்க்கவே முடியாத பங்களிப்பை வழங்கியுள்ளார்.
2010 இல் இவர் எழுதி வெளியிட்ட மாதொருபாகன் எனும் நாவல் கருத்துச் சுதந்திரத்தின் மீதான பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
குழந்தைப்பேறில்லாத தம்பதியரின் துயரங்களை பேசும் அந்த நாவல் 100 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை பேசியது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்று அவரே அறிக்கை வெளியிட்டு எழுதுவதையே நிறுத்தியிருந்தார்.
அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து 2016 இல் கோழையின் பாடல்கள் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் எழுத்துலகுக்கு மீண்டு வந்தார்.
அதன்பிறகு தொடர்ந்து பூனாச்சி, கழிமுகம் என இரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டார்.
பெருமாள் முருகனின் மாணவர்கள் 42 பேர், அவருடனான அனுபவத்தை எழுதி ‘எங்கள் ஐயா!’ என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார்கள்.
விளக்கு விருது, கதா விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது, போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும், மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும், செக் மொழியிலும் வெளியாகியுள்ளன.
மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்தின் சர்வதேச அடையாளமாக மாறியிருக்கும் பெருமாள் முருகனுக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
– நியூஸ் ஜெ செய்திகளுக்காக பாரதி கனகராஜ்
Discussion about this post