கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தின் சொத்துகளை அரசு நிர்வகிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது, வீர சைவ பெரிய மடம். தற்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த மடத்தின் தற்போதைய மடாதிபதியாக நீலகண்ட சாரங்க தேசிக சுவாமிகள் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் இளைய மடாதிபதியாக இருந்த கங்காதரன் திருமணம் முடித்ததால், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட கங்காதரனுக்கும், மடாதிபதிக்கும் இடையே சொத்துக்களை நிர்வகிப்பதில் போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே வீர சைவ பெரிய மடத்துக்குச் சொந்தமான 400 கோடி ரூபாய் சொத்துக்களை தமிழக அரசு நிர்வகிக்க வேண்டும் என்றும், மடாதிபதிகள் விஷயத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மடாதிபதிகள் ஒன்று கூடி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.