திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், கழிவுப் பொருட்களால் சீரழிந்துவரும் செய்யாற்றை மீட்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜவ்வாது மலையில் துவங்கி, குப்பநத்தம் அணையிலிருந்து, உபரி நீர் பரமனேந்தல், செங்கம் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக சென்று செய்யாறு, பாலாற்றில் கலக்கிறது. செய்யாற்றில் மழைக்காலங்களில் சேகரமாகும் நீர், அப்பகுதியில் உள்ள பல்வேறு ஏரி, குளம், குட்டைகளுக்கு, நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், தற்போது செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக செங்கம்-போளூர் சாலையில் உள்ள செய்யாற்றில், குடியிருப்புவாசிகள், பொதுமக்கள், வணிகர்கள் தங்களுடைய கழிவுகளை நேரிடையாக ஆற்றில் கலந்து வருகின்றனர். இதனால் சீரழிந்துவரும் செய்யாற்றை, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். இதனுடன் இணைந்துள்ள கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி செய்யாற்றை பாதுகாக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Discussion about this post