பெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. விளக்கம் அளித்த மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது பரபரப்பையும் கூட்டியுள்ளது. 

அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் என உலக முழுவதும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தான் ஒட்டுமொத்த ஹாட் டாப்பிக்.

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் உதவியுடன், இந்தியாவில் பல அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் உச்சக்கட்ட பரபரப்பையும், அரசியல் வட்டாரம் சூட்டையும் கிளப்பியுள்ளது.

பெகாசஸ் எனும் புதிய பூதம் கிளம்பியுள்ள நிலையில், எதிர்கட்சிகள் இதுதொடர்பாக விவாதிக்குமாறு வலியுறுத்தி முழக்கமிட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறந்தது.

பெகாசஸ் விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்தார். மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமம் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைபேசி உரையாடல்களை உளவு பார்க்கும் நாடுகளின் பட்டியல் தவறானது என்று கூறிய அவர், இந்த கூற்றுக்கள் புனையப்பட்டவை என்றும் விளக்கம் அளித்தார்.

ஆனால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் தொலைபேசியும் ஹேக் செய்யப்பட்டிருபபதாக தகவல் வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை கூட்டியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, மத்திய உள்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினார். இஸ்ரேல் செயலி மூலம் மோடி அரசு உளவு பார்ப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெகாசஸ் விவகாரத்தால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பூதாகரமாக எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version