விளம்பரப் பதாகைகள், பேனர்கள் வைப்பதைக் கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படவுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விளம்பரப் பதாகைகள், பேனர்கள் அமைக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சென்னை காவல்துறையுடன் இணைந்து தனி அலைபேசி எண்ணுடன் கூடிய மூன்று நடமாடும் வாகனங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைக்கப்படும் பதாகைகள் குறித்து, மண்டலம் ஒன்று முதல் 5 வரையிலான வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில், 94451 90205 என்ற எண்ணிற்கும், மண்டலம் 6 முதல் 10 வரையிலான மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில், 94451 90698 என்ற எண்ணிற்கும், மண்டலம் 11 முதல் 15 வரையிலான தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில், 94451 94802 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதை மீறி விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பவர்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு விளம்பர பதாகைக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியின் உத்தரவின்றி பதாகைகள் அச்சடிக்கும் அச்சக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post