தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்த பாகிஸ்தான் பெண்ணின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வறட்சி, பண மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றால் பாகிஸ்தானில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களான கோதுமை, அரிசி ஆகியவற்றின் விலைகள் கூட அங்கு அதிகமாக உயர்ந்து உள்ளன. இவற்றோடு தக்காளியின் விலையும் பாகிஸ்தானில் சமீபநாட்களாக வானளாவ உயர்ந்து வருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதே இந்த விலை உயர்வுக்குக் முக்கியக் காரணம். இதனால் பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி சுமார் 400 ரூபாய் வரை விற்பனையாகின்றது.
பாகிஸ்தானின் இந்த அவல நிலையை வெளிக்காட்டும் விதமாக, அந்நாட்டு மணப் பெண் ஒருவர் தக்காளிகளைக் கோர்த்து, தங்க நகைகளைப் போல அணிந்து உள்ள வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் தக்காளி மாலை, தக்காளி தோடு, தக்காளி வளையல் தக்காளி நெற்றிச் சுட்டி ஆகியவற்றோடு ஒரு மணப்பென் உள்ளார். அவர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கிறார். அந்தப் பேட்டியில், பாகிஸ்தானில் தங்கத்தைப் போலவே தக்காளியும் விலை உயர்ந்த பொருள் என்பதால் தான் தக்காளி நகைகளை அணிந்து உள்ளதாகவும், தனது கல்யாண சீதனம் கூட தக்காளிதான் என்றும், தனது தாய்வீட்டார் 3 கூடை தக்காளியை சீதனமாக அளித்துள்ளனர் என்றும் அவர் கூறி உள்ளார். இந்தப் பேட்டியும், தக்காளி நகை அணிந்த பெண்ணின் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சியை இனியும் அதனால் உலகிடமிருந்து மறைக்க முடியாது என்பதே தக்காளி நகையணிந்த மணப்பெண்ணின் புகைப்படங்கள் உலகுக்குச் சொல்லும் செய்தியாக உள்ளது.
Discussion about this post