மக்கள் நலனில் எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என பாகிஸ்தானுக்கு, அந்நாட்டு மாணவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கும் சீனாவின் வூகான் நகரில் 45 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒரு மருத்துவத் தலைநகரைப் போல் திகழும் வூகான் நகரில் தங்கி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து, சீன அரசு, வூகான் நகருக்கு சீல் வைத்தது. இதையடுத்து, விரைந்து செயல்பட்ட இந்திய அரசு, சிறப்பு விமானங்களை அனுப்பி 700-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டது. ஆனால் பாகிஸ்தான் அரசு இதுபோல் எந்த நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால், வூகான் நகரில் தங்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால், கொதித்துப்போன பாகிஸ்தான் மாணவர்கள், இந்திய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, மாணவர்களை மீட்கும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும், அவற்றை பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியும் தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். சொந்த நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பில்லாத பாகிஸ்தான் அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நலனில் எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
Discussion about this post