காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதும், பாகிஸ்தானின் அரசுதான் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது என்பதும் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த ஆய்வு குறித்து செய்தி தொகுப்பு..
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக வெளிக்காட்டுவதில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆர்வம்காட்டி வருகின்றது. காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வில் விவாதிக்க வேண்டும் – என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் ஆதரிக்கவில்லை என்ற போதும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பல்வேறு நாடுகளிடமும் ஆதரவுகேட்டு வருகின்றது.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானின் மக்கள் முதலில் ஆர்வம்காட்டுகிறார்களா? அவர்கள் எதனை முக்கியப் பிரச்சனையாகக் கருதுகிறார்கள்?- என்பது குறித்த ஒரு ஆய்வு பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய 4 மாகாண மக்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை கேலப் இன்டர்நேஷனல் அசோசியேஷன் எனும் சர்வதேசக் கள ஆய்வு நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் பாகிஸ்தான் அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி, பாகிஸ்தானின் மக்கள் முக்கியப் பிரச்னைகளாகக் கருதுவது உள்நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைத்தான் – என்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற மக்களில் 53 சதவிகிதம் பேர் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வருவதுதான் முக்கியப் பிரச்சனை என்று கூறி உள்ளனர். வேலை இல்லாத் திண்டாட்டம்தான் முக்கியப் பிரச்சனை என்று 23 சதவிகிதம் பாகிஸ்தான் மக்கள் கூறி
உள்ளனர். வெறும் 8 சதவிகிதம் மக்கள் மட்டுமே காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானின் பிரச்சனையாகக் கூறி உள்ளனர். ஊழல் மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியவையே முக்கியப் பிரச்சனைகள் என்று தலா 4 சதவிகிதம் பாகிஸ்தானியர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆய்வில் இருந்து, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை அந்நாட்டு மக்களே விரும்பவில்லை என்பதும், தனது ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க காஷ்மீர் பிரச்சனையை ஒரு கேடயமாக பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் பயன்படுத்துகிறார் என்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
Discussion about this post