பாகிஸ்தானின் மக்களில் இரண்டில் ஒருவர் நாளுக்கு இரண்டு வேளை உணவு கூட இல்லாமல் தவிப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீரழிக்கப்பட்ட பாகிஸ்தானின் தற்போதைய பரிதாபநிலை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…
ராணுவ ஆட்சி, தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஓயாத தீவிரவாதம் – இவற்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த பாகிஸ்தானில் மீண்டும் அதே நிலை திரும்பி இருக்கிறது.
பாகிஸ்தான் மக்களின் ஊட்டச் சத்து நிலவரம் குறித்து பாகிஸ்தானின் தேசிய மருத்துவ சேவைகள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளிவந்தன, அவைதான் அந்நாட்டு மக்களின் பரிதாப நிலையை தற்போது உலகுக்கு வெளிக்காட்டி வருகின்றன. ஆய்வுகள் கூறும் தகவல்களின்படி, பாகிஸ்தானில் வாழும் குடும்பங்களில் 50% பேருக்கு, ஒரு நாளுக்கு இரண்டு வேளைகள் உணவு கிடைப்பதே கடினமாக உள்ளது. இதனால் மொத்த மக்களில் 50% பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையோடு வாழ்கின்றனர்.
35%க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச் சத்துகள் இல்லை. இவர்கள் இறக்காமல் இருக்கவே உண்கிறார்கள்.
பாகிஸ்தானின் 40% குழந்தைகள் சத்தான உணவுகள் இல்லாமல் வளரும் சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் இவர்களின் எதிர்காலமும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி உள்ளன.
பாகிஸ்தான் அரசின் கஜானா காலியாக உள்ளதால், சிறிய தேவைகளுக்குக் கூட அண்டை நாடுகளிடம் கடன் கேட்கும் நிலையில்தான் உள்ளது. பிரதமர் இம்ரான்கான் சிக்கன நடவடிக்கைகளை பெருமளவில் வலியுறுத்தி வருகிறார். அரசிடம் நிதி இல்லை, மக்களுக்கு உணவு இல்லை என்ற நிலையில் பாகிஸ்தான் மக்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது. இனிவரும் காலங்களில், இந்நிலை இன்னும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால், உள்நாட்டில் கடுமையான வறுமை உள்ள போதும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து போர்களுக்கும், தீவிரவாத உதவிகளுக்கும் பணத்தை வீணடிப்பதாக சர்வதேச பார்வையாளர்கள், அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.
Discussion about this post