இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு

இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் வாங்கவுள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய, ரஷிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் டெல்லி வந்திருந்தார். இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், விளாடிமிர் புதினும் சந்தித்து பேசினார்கள். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, ரஷியாவிடம் இருந்து 37 ஆயிரம் கோடி மதிப்பில் அதிநவீன ‘எஸ்-400’ ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம், அண்டை நாடான பாகிஸ்தானை அலற வைத்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு எடுத்துள்ளது.அந்த வகையில் சீனாவிடம் இருந்து 48 அதிநவீன ‘விங் லூங்-2’ ஆளில்லா விமானங்களை வாங்க உள்ளது.

இந்த 48 ஆளில்லா விமானங்களை சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவல்களை பாகிஸ்தான் விமானப்படையின் ஷெர்டில்ஸ் ஏரோபாட்டிக் குழு, தனது அதிகாரப்பூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது, அவற்றின் மதிப்பு,எப்போது வினியோகம் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.பாகிஸ்தானுக்கு,சீனா ஆளில்லா விமானங்களை வினியோகம் செய்யப்போவது இதுவே முதல் முறை.

மேலும் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ‘ஜே.எப். தண்டர்’ என்னும் ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானங்களையும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version