பாகிஸ்தானில் சரிந்துள்ள பொருளாதாரத்தை உயர்த்த தொழிலதிபர்களை அழைத்து, அந்நாட்டின் ராணுவத் தளபதி விவாதித்துள்ளார் என்ற தகவல்கள், சர்வதேச அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த பரபரப்புக்கு காரணம் என்ன?
பாகிஸ்தானின் பொருளாதாரமும் கடும் பாதிப்பில் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. பாகிஸ்தானில் பட்ஜெட் பற்றாக்குறை 8.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள, டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மோசமான நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில் அந்நாட்டு ராணுவத்தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா இறங்கியுள்ளார். பிரதமர் இம்ரான் கான் தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அங்கு நடைபெற்றுவருகிறது. ஆனாலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் காட்டிலும் அதிகாரம் மிகுந்ததாகக் கருதப்படும் ராணுவத்தின் தளபதி, அந்நாட்டின் முக்கியத் தொழிலதிபர்களை அழைத்து பொருளாதார நிலைமைகுறித்து விவாதித்திருக்கிறார். இது, சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பொருளாதாரம் குறித்து ராணுவத் தளபதி ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும், நேரடியாக அவர் ஏன் தொழிலதிபர்களுடன் பேச வேண்டும் என்கிற கேள்விகள் எழுகின்றன. மேலும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதும், தொழிலதிபர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ராணுவத் தளபதியின் நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
இம்ரான் கான் தலைமையிலான கட்சி இப்போதுதான் முதன்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒப்பிடும்போது, இம்ரான் ஆட்சிக்குப் போதிய அனுபவம் இல்லை என்று அவர்கள் சொல்லும் காரணம் அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது.
இந்தநிலையில் அரசும் ராணுவமும் இணைந்து பணியாற்றுவதாக இம்ரான் கான் வெளிப்படையாகக் கூறியுள்ளார். 58 வயதான ராணுவத் தளபதி பாஜ்வாவுக்கு, மூன்றாண்டு காலம் பதவிநீட்டிப்பு வழங்கியுள்ளார் இம்ரான் கான்.. பாகிஸ்தானின் 72 ஆண்டுகால வரலாற்றில், பாதி காலத்தை ராணுவம்தான் ஆட்சிசெய்துள்ளது. அதனால், ஆட்சியை மீண்டும் ராணுவம் பிடிக்கலாம் என்று ஜனநாயகத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் கவலையுடன் பார்க்கின்றனர்.
Discussion about this post