டெல்லியில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிடிபட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர், 24 மணி நேரத்தில் தாயகம் திரும்ப மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அப்டி ஹூசைன், தாஹீர் கான் ஆகியோர் கரோல் பாக் பகுதியில் முக்கிய ஆவணத்துக்கான ஆதாரத்தை பெற உள்ளதாக, அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கரோல் பாக் பகுதிக்கு காரில் சென்ற இரு அதிகாரிகளையும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை, 2 ஆப்பிள் ஐ- போன்கள், 15 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு, தகவல்களை பரிமாறுபவர்கள் என தெரியவந்துள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, பிடிபட்ட இரு அதிகாரிகளும் இந்தியாவில் இருந்து 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துவதாக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post