ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது.
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடமிருந்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம்.
ஓசோனின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனை பாதுகாக்க 1987, செப். 16ல் கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் ‘மான்ட்ரியல் ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதனை குறிக்கும் விதமாக 1987ல் இருந்து செப். 16ம் தேதி உலக ஓசோன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் ‘குளிர்ச்சியை தக்க வைத்து முன்னேறுங்கள்’ என்பதாகும்.
ஓசோன் என்பது ஆக்ஸிஜனின் மற்றொரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனானது பூமியில் இருந்து 10 முதல் 50 கிமீ இடைவெளியில் காணப்படுகிறது. ஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியை கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம். ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பது தான்.
1980-ம் ஆண்டில் அண்டார்க்டிக்கா மேற்பகுதியில் மிகப்பெரிய ஓசோன் துளை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30% குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டது. ஓசோன் படலம் பாதிக்க காரணமாக இருப்பது நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, ஏர் கூலர்கள், மற்றும் தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் குளோரோ புளோரா கார்பன் மற்றும் புகையே ஆகும்..
ஓசோன் வாயுக்களின் அளவு குறைந்தால், பூமியின் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
எனவே இறைவன் அளித்த பாதுகாப்பு பொக்கிஷமான ஒசோனை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் இன்றையமையா கடமையாகும்.
Discussion about this post