உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நான்கு மில்லியனைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டியூட்டும், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெக்கா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியை குறைந்த அளவிலான குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்துள்ளனர். அதில் தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் உடலில் பதினான்கு நாட்களில் கொரோனா ஆண்டிபாடி உருவானது. அடுத்த கட்ட தடுப்பூசி கொடுப்பதற்கு முன்பே இருபத்து எட்டு நாட்களில் நோயைத் தடுக்கவல்ல ஆண்டிபாடி உருவானது கண்டறியப்பட்டது.
மேலும், அது நுரையீரல் பாதிப்படைவதைத் தடுப்பதையும், உடலில் நுழைந்த வைரஸ் புதுப்பித்து பரவுவதைத் தடுப்பதையும் மருத்துவ ஆராய்ச்சிக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். ஆனால் மூக்குப் பகுதியில் இருக்கும் கொரோனா வைரஸை அந்த தடுப்பூசியால் எதுவும் செய்யமுடியவில்லை. இந்த ஆய்வை கொரோனாவுக்கு எதிரான போரில் அறிவியலுக்கு கிடைத்துள்ள முக்கிய முன்னேற்றமாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.
Discussion about this post