சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தேசிய பேரிடர் காலங்களின்போது மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது போலவே தற்போதும் நீட்டித்தாகவும், நுகர்வோர்களிடமிருந்து மின் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்தால் பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பிற மாவட்டங்களை பொறுத்தவரை ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அதன்படி 75 சதவிகித நுகர்வோர் கட்டணத்தை செலுத்திவிட்ட நிலையில் கால நீட்டிப்பு வழங்குவதற்கான வாய்ப்பில்லையென கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் உத்தரவு பிறப்பிப்பிக்கப்படுமென தெரிவித்தனர்.
Discussion about this post