காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்திய – சீனத் தலைவர்கள் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் விரிவான பேச்சு நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் நாளை மறுநாள் சென்னைக்கு வருகின்றனர். அங்கிருந்து மாமல்லபுரம் செல்லும் அவர்கள் அங்குக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களைப் பார்வையிடுகின்றனர். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துத் தலைவர்கள் இருவரும் பேச்சு நடத்த உள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வை முன்னிட்டு மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருநாட்டுத் தலைவர்கள் வருகையை முன்னிட்டுப் மத்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்தியத் தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டைக் கல், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துப் பேசுவதற்குக் குண்டு துளைக்க முடியாத கண்ணாடி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி 150க்கு மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இன்று கடலோரத்தில் குதிரைப்படை ஒத்திகை பார்க்கப்பட்டது. கடலோரத்தில் கண்காணிப்பை மேற்கொள்வதற்காகச் சென்னை மாநகரக் காவல்துறையில் உள்ள குதிரைப்படையினர் மாமல்லபுரத்துக்குச் சென்றிருப்பது குறிப்பிடத் தக்கது. இதனிடையே சீனாவின் ஊகான் நகரில் ஏப்ரல் மாதம் இரு தலைவர்களும் பேச்சு நடத்தியதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் பேச்சு நடைபெறுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.