புதிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்ற சர்ச்சைக்குரிய வரியை நீக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக, இந்தியாவின் அலுவல் மொழி இந்தி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற வரிகளை புதியதாக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போன்று, 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் “முஸ்லிம் மக்கள் முஸ்லிம் ஆட்சியை நிறுவக்கோரி புரட்சியில் ஈடுபட்டனர் ” என்ற வரிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் சில நீக்கங்களையும் குறிப்பிட்டு, அந்த வரிகளை உடனே நீக்கியும், புதிய வரிகளைச் சேர்த்தும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.