தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, அசோக் லவாசா தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தேர்தல் குறித்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சிகள், அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். 2 நாள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர்கள், தேர்தலையொட்டி நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படைக்கு ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நவீன வாகனங்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறினர். பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க சி விஜில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதை குறிப்பிட்ட தேர்தல் ஆணையர்கள், இதுவரை ஆயிரத்து 650 புகார்கள் பெறப்பட்டு அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்கள், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினர். உரிமம் பெற்ற 19 ஆயிரத்து 655 துப்பாக்கிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
Discussion about this post