ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்க உத்தரவு

ராணுவத்தில் உள்ள அனைத்துப் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர ஆணையத்தை அடுத்த 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்கள் குறுகிய காலம் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைக் கடந்த 2010-ம் ஆண்டு விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடற்படையில் பெண்களை முழுமையான சேவையில் பணியமர்த்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு எந்த விதமான உயர்ந்த பதவிகளை வழங்குவதிலும் தடை ஏதும் இல்லை என்று தெரிவித்தனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மத்திய அரசின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும் என்றும், ராணுவத்தில் பெண்களுக்கும் உயர்ந்த அந்தஸ்து உள்ள பதவிகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், ராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு நிகராக, பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரமான ஆணையத்தை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Exit mobile version