விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் 2வது நாளாக இன்றும் விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுக்களை பெற்று, வழங்கலாம் என அதிமுக தலைமை அறிவித்தது. இதன்படி, நேற்று முதல் நாளில் 27 பேர் விருப்ப மனுக்களை பெற்று தாக்கல் செய்தனர். இன்று பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இதையடுத்து இன்று மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்ப கட்டணத் தொகையான 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி விண்ணப்ப படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்க வேண்டும் என்றும், பின்னர் நேர்காணல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post