மின்சார தட்டுப்பாட்டை நீக்க முடியாத அரசாக திமுக அரசு இருந்தது: ஓ.பன்னீர் செல்வம்

மின்சார தட்டுப்பாட்டை நீக்க முடியாத செயலற்ற அரசாக திமுக அரசு இருந்தது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். வாக்கு சேகரிக்க சென்ற துணை முதலமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பேசிய துணை முதலமைச்சர், ஆலமரமாக நிலைநிற்கும் அதிமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று கூறினார்.

அலங்காநல்லூர் கேட் கடை பகுதியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பேசிய துணை முதலமைச்சர், காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திமுக, எந்தவித உருப்படியான திட்டமும் கொண்டுவரவில்லை என்று விமர்சித்தார். பழங்கள், காய்கள் செழிக்க அலங்காநல்லூர் பகுதிக்கு குளிர்சாதன நவீன கிடங்கு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Exit mobile version