ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளது திமுகவுக்கு எதிரான சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இதனால், காட்பாடியில் தண்ணீரை காசுக்கு விற்கும் துரைமுருகனுக்கு ஜோலார்பேட்டையின் நீர் குறித்துப் பேச தகுதி உள்ளதா? – என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவை குறித்து விரிவாகப் பார்ப்போம்…
சென்னைக்கு தண்ணீர் வழங்கும் நீராதாரங்கள் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒரு அங்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த சூழலில்தான் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன் சர்ச்சையாகப் பேசி உள்ளார்.
சென்னையில் வசிக்கும் துரைமுருகன் மக்களின் வறட்சி தெரிந்தும் வேலூர் தேர்தல் வெற்றிக்காக இப்படிப் பேசி இருப்பது சென்னை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மாவட்ட மக்களும் சென்னையில் உள்ளனர். அப்போது பிற மாவட்டங்களில் இருந்து தண்ணீர் எடுப்பதில் என்ன தவறு?’ என்றும் கேள்வி கேட்கின்றனர்.
இன்னொருபக்கம் அதற்கும் மேலே போய் காட்பாடியில் தண்ணீரைக் காசுக்கு விற்கும் துரைமுருகனுக்கு ஜோலார்பேட்டை தண்ணீர் குறித்துப் பேச என்ன தார்மீக தகுதி இருக்கிறது? என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.
ஏனெனில் வேலூர் காட்பாடியில் துரைமுருகனுக்குச் சொந்தமாக அருவி மினரல் வாட்டர்ஸ் என்ற குடிநீர் விற்பனை நிறுவனம் உள்ளது. இதற்கென ஒரு குடோனும் காட்பாடியில் உள்ளது. வெயிலுக்குப் பெயர் போன வேலூரில் சாதாரண நாட்களிலேயே தண்ணீர் அரிதுதான் எனும் நிலையில், தற்போது தமிழகமே வறண்டுள்ள சூழலில் அருவியில் தண்ணீர் விற்பனை உச்சத்தில் இருப்பதாக தெரிகிறது. சென்னை வரை அருவியின் தண்ணீர் விற்பனை ஆகிறது.
தமிழக அரசு மீது குற்றம் சொல்லும் துரைமுருகன், வேலூரில் இருந்து நீர் எடுப்பதை நிறுத்திவிட்டாரா? தண்ணீரை விற்கும் அவர் வேலூரின் தண்ணீரைப் பெருக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? வேலூரில் எடுக்கப்படும் நீரை அவர் வேலூரில் மட்டும்தான் விற்கிறாரா? சென்னைக்கு வேலூரே தண்ணீர் தராது என்றால் கர்நாடகாவும் ஆந்திரவும் எப்படித்தரும்? என்று துரைமுருகனுக்கு எதிரான கேள்விகள் சமூக வலைத்தளங்களிலும் கொடிகட்டிப் பறக்கின்றன.
இதனால், வேலூர் மக்களையும் சென்னை மக்களையும் ஏமாற்றி வரும் திமுக பொருளாளர் துரைமுருகனின் முகமூடி, தண்ணீர் குறித்த சர்ச்சைப் பேச்சால் கிழிந்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
Discussion about this post