பார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு, பார்பியின் கனவு இல்லத்தில் தங்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு
பெண் குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்ற பார்பி பொம்மையானது 1959ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ரூத் ஹேண்ட்லர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அனைத்தும் சிறு குழந்தைகளின் உருவ அமைப்பைக் கொண்டதாகவே இருந்தன. ஹேண்ட்லர் ஒரு முறை தனது மகள், அவளுடைய குழந்தை பொம்மைக்குப் பெரியவர்களின் உடையை அணிவித்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறார். இது அவருக்கு முதிர்ச்சியடைந்த உருவ அமைப்புடன் கூடிய பொம்மையை உருவாக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அதற்கான முயற்சியில் இறங்கிய ஹேண்ட்லர், ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியுடன் ஒரு பொம்மையை வடிவமைத்தார். அந்தப் பொம்மைக்கு அவரது மகள் பார்பராவின் பெயரைக் குறிப்பிடும் விதமாக பார்பி என்று பெயரிட்டார்.
1959ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன் முதலாக வெளியிடப்பட்டது. இந்த நாள் பார்பியின் அதிகாரப் பூர்வமான பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பார்பி பொம்மைகள் உருவாக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இன்றுவரை அதன் விற்பனை குறையாமல் உள்ளது. அதுமட்டுமின்றி விதவிதமான உடைகள், ஒப்பனைப் பொருட்கள், வீடு என்று பல்வேறு புதிய அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டது. இது குழந்தைகளுக்கு அதன் மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது. பார்பி பொம்மைகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பெரிதும் கவர்ந்தது. இதன் மீதான தீவிர ஆர்வத்தால் சில ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக தங்கள் உடலையும் பார்பி பொம்மை போன்று உருமாற்றம் செய்துள்ளனர்.
இவ்வாறு மிகவும் பிரபலமடைந்துள்ள பார்பி பொம்மை, இந்த ஆண்டு தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு மணிலாவில் உள்ள பார்பியின் கனவு இல்லத்தில், அதன் ரசிகர்கள் விருந்தினர்களாகத் தங்கிச் செல்லும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. கடற்கரையோரம் உள்ள கனவு இல்லத்தில் நான்கு படுக்கை அறைகள், தியான அறை, பொழுதுபோக்கு ஸ்டுடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
ஒரு இரவுக்கு இந்திய மதிப்பில் 4,272 ரூபாய் வீதம் இரண்டு நாட்களுக்கான வாடகைக் கட்டணம் செலுத்தி அக்டோபர் 27 முதல் 29ஆம் தேதி வரை இந்த வீட்டில் தங்கலாம்.அந்த இல்லத்தில் தங்க விரும்புவோர் Airbnb என்ற செயலி மூலம் அக்டோபர் 23ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பல பார்பி ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏதேனும் பரிசு அளிக்க நினைத்தால் முதலில் அவர்கள் நினைவுக்கு வருவது பார்பி பொம்மைதான், அந்த வகையில் தற்போது அதிக வரவேற்பைப் பெற்றுள்ள பொம்மையாக பார்பி பொம்மை இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post