தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இரண்டாயிரத்து 340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சேர விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாயிரத்து 340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் சேர செப்டம்பர் நான்காம் தேதி முதல் 24ஆம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்கிற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. 2019 ஜூலை ஒன்றாம் தேதி அன்று 57 வயது நிறைவடைந்திருக்கக் கூடாது. முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், நெட், ஸ்லெட் ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பெண்களில் 5 விழுக்காடு தளர்வு அளிக்கப்படும். உதவிப் பேராசிரியர் பணிக்கு இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும்போது மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் முந்நூறு ரூபாயும், மற்றவர்கள் அறுநூறு ரூபாயும் இணையத்தளத்திலேயே செலுத்த வேண்டும். விரிவான விவரங்களை www.trb.tn.nic.in என்கிற இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிந்து கொள்ளலாம்.
Discussion about this post