மும்பையிலுள்ள தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தூய்மையான சிறந்த பூங்காவாக, புகழ்பெற்ற உதகை தாவரவியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1848-ம் ஆண்டு உதகையில் காய்கறி தோட்டமாக இருந்த சதுப்பு நில மலைச்சரிவு பூங்காவாக வடிவமைக்கப்பட்டது. இதில் 5 ஏக்கர் புல்தரை, இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை மற்றும் மேல் கார்டன் என பல பிரிவுகளில் அமைக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்காவில் வெளிநாட்டு மரங்கள், கொடிகள் மற்றும் மலர்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கை பூங்காவாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு பருவகால சீசனில் தோட்டக்கலை துறை மூலம் உருவாக்கப்படும் மலர் கண்காட்சியை சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், தமிழகத்திலுள்ள பூங்காக்களை, மும்பையிலுள்ள ஸ்காட்ச் என்ற அமைப்பு ஆய்வு செய்து மதிப்பிடு செய்ததில், உதகை அரசு தாவரவியல் பூங்கா சிறந்த பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை இணை இயக்குனர் தெரிவித்தார். 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தாவரியல் பூங்கா, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே உதகை மக்களின் விருப்பமாக உள்ளது.