சென்னையில், பாலியல் புகாருக்கு ஆளான விடுதி வார்டன் ஒருவர், முத்தம் மட்டும் தான் கொடுத்தேன், வேறொன்றும் செய்யவில்லை என வாக்கு மூலம் அளித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் பகுதியில், தனியார் காப்பகம் ஒன்று 1973 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில், முதியவர்கள், சிறுவர்கள், சிறுமிகள், இளம் பெண்கள் என சுமார் 130 பேர் தங்கியுள்ளனர்.
இந்த காப்பகத்தின் நிர்வாக செயலாளரான இசபெல் ரிச்சர்ட்சன், தனது சகோதரரான பென்னர்ட் ரிச்சர்ட்சன் என்பவரை, காப்பக கமிட்டி உறுப்பினர்கள் அனுமதியின்றி காப்பகத்தில் தங்க வைத்துள்ளார். பென்னர்ட் ரிச்சர்ட்சன் காப்பகத்திற்கு வந்த நாள் முதல், அங்கிருந்த 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளம்பெண் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பென்னர்ட் ரிச்சர்ட்சன்னின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க, பொறுமை இழந்த இருவரும், இது குறித்து காப்பகத்தின் கமிட்டி உறுப்பினர்களிடம் புகார் அளித்துள்ளனர். அப்போதுதான் பென்னர்ட் ரிச்சர்ட்சன் காப்பகத்தில் தங்கியுள்ள விஷயமே அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த இசபெல் ரிச்சட்சனையும் காப்பகத்தில் இருந்து வெளியேற்றியதுடன், காவல் துறையினரிடமும் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இசபெல் ரிச்சட்சன் மற்றும் பென்னர்ட் ரிச்சர்ட்சன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையின் தொடக்கத்தில், நான் ஒரு தவறும் செய்ய வில்லை என சாதித்து வந்தார் பென்னர்ட் ரிச்சர்ட்சன். ஆனால் போலீசார் தங்கள் பாணியில் அவரை விசாரிக்க, சிறுமிகளுக்கு முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்… வேறொன்றும் செய்ய வில்லை என வாய்கூசாமல் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, காப்பகத்தில் இருந்த வேறு யாரேனும் இந்த காமுகனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post