திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகா தீபத்தன்று மலை ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மலை ஏற விருப்பமுள்ள பக்தர்கள், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் 11 மணி வரையில் அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வருபவர்கள் உரிய அடையாளச் சான்று ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என்றும் மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்களை இறங்கி வரும்போதும் கொண்டு வரவேண்டும். மலையேறும் பக்தர்கள் கண்டிப்பாக கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது.
நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்றவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post