நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெங்காயம் பற்றிய பேச்சுகள் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள வெங்காயம் விவசாயி ஒருவர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெங்காயம் விற்பனை செய்து கோடீஸ்வரராக மாறி உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. வயது 42. இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வெங்காயம் சாகுபடி செய்து வருகிறார். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.5 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் வெங்காயம் சாகுபடி செய்வதற்காக ரூ.15 லட்சம் முதலீடு செய்த நிலையில், 5 அல்லது 10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், எதிர்பாராத வகையில் பெரிய ஜாக்பாட் அடித்தது. 240 டன் வரை வெங்காயம் அறுவடை செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் ஒரு கிலோவுக்கு ரூ.200 வரை விலை உயர்ந்தது. இதன் மூலம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து கோடீஸ்வரராகி உள்ளார்.
இதுகுறித்து மல்லிகார்ஜுனா கூறும்போது, கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். இதுவரை நான் எடுத்த மிகப் பெரிய ஆபத்து இது தான் என்று தெரிவித்தார். ஒரு வேளை பயிர் தோல்வி அடைந்திருந்தாலோ அல்லது விலை சரிந்திருந்தாலோ மோசமான கடனை நான் சந்தித்து இருப்பேன். தற்போது, வெங்காயம் என் குடும்பத்தின் நிலையை மாற்றி உள்ளது. நான் எனது கடனைத் தீர்த்துவிட்டேன், வீடு கட்ட திட்டமிட்டிருக்கிறேன் வரும் ஆண்டுகளில் விவசாயப் பணிகளை விரிவுபடுத்துவதற்கு அதிக நிலங்களை வாங்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். மல்லிகார்ஜூனிடம் விவசாய பணியில் தினமும் 50 பேர் பணியாற்றி வருகிறார்கள்.