டெல்லியில் கூட்டுறவு அங்காடி மூலம் வெங்காயம் விற்க அரசு நடவடிக்கை

வெங்காயம் விலை ஆப்பிள் விலைக்கு இணையாக உயர்ந்துள்ள நிலையில், டெல்லியில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ 22 ரூபாய் என்கிற விலைக்குப் பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் வெங்காயப் பயிர்கள் அழுகிப் போய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டில் இருந்து சந்தைக்கு வெங்காய வரத்து பெரிதும் குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்லி பஞ்சாப் மாநிலங்களில் வெளிச்சந்தையில் கடந்த வாரம் 25 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ வெங்காயம் இப்போது 80ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் நலன்கருதி சந்தையில் இருந்து வெங்காயத்தைக் கொண்டுவந்து கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ 22 ரூபாய் என்கிற நியாயமான விலைக்கு விற்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூட்டுறவு அங்காடிகள் இல்லாத இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமாக மலிவு விலைக்கு வெங்காயம் விற்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உள்நாட்டுச் சந்தைக்கு வெங்காயம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ஒரு டன்னுக்கு அறுபதாயிரம் ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அரசிடம் 56 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு உள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version