இன்னும் 50 ஆண்டுகளில், உலகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிய உள்ளன என எச்சரிக்கின்றது ஒரு ஆய்வு.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக பேராசிரியர்கள், உலகெங்கும் பல்வேறு பருவநிலைகளில் உள்ள 19 இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடங்களில் பருவநிலை மாறுபாடுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் இதழில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் உலகெங்கும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குதாக உள்ளன.
இந்த ஆய்வுகளின்படி, உலகெங்கும் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளில் 3ல் ஒரு பங்கு உயிரினங்கள் வரும் 2070ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக அழிய உள்ளன.
மேலும் இந்த ஆய்வில், ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் காலநிலை சீரழிவைச் சந்திக்கும் போது, அங்குள்ள மக்கள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால் அந்தப் பகுதிக்கே உரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளால் அப்படிச் செய்ய முடியாது. இதனால் காலநிலை மாறுபாட்டிற்கு அவை பலியாகின்றன.
வழக்கத்தை விடவும் குறைவான வெப்பநிலை மற்றும் அதிகமான வெப்பநிலை – என்ற இரண்டு சூழல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்ட போது. வெப்பநிலை ஓரளவுக்கும் மேல் அதிகரிக்கும் போது, தாவரங்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை – என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த10 ஆண்டுகளில், 581 இடங்களில் உள்ள 538 தாவர வகைகள் பற்றி நடந்த ஆய்வுகளில், 538 தாவர இனங்கள் பருவநிலை மாறுபாட்டால் சுமார் 44 சதவீகித அழிவை சந்தித்ததாக இந்த ஆய்வு கூறுகின்றது.
பருவநிலை மாறுபாட்டில் இருந்து, உலகைக் காப்பது குறித்து சமீபத்தில் பாரீஸ் நகரில் நடந்த, பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை உலக நாடுகள் அப்படியே செயல்படுத்தினால் கூட, உலகில் உள்ள 20% தாவரம் மற்றும் விலங்கினங்களை அழிவில் இருந்து நம்மால் காக்க முடியாது -என்கிறது இந்த ஆய்வு.
கடந்த சில ஆண்டுகளில் காடுகள் அழிப்பு வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், உலகத்திற்கான எச்சரிக்கை மணியாக உள்ளது அரிசோனா பல்கலைக் கழகத்தின் இந்த ஆய்வு.