பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலியை, ஒரே நாளில் ஒரு லட்சம் பெண்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில், பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் பொழுது காவல்துறைக்கு தகவல் கொடுப்பது மற்றும் பிரச்னையிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவல்லிக்கேணி சரக காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு, காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை பெண்களுக்கு வழங்கினார். பெண்களுக்கு பூக்களை வழங்கிய பெண் காவலர்கள், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் தர்மராஜன், காவலன் செயலி பெண்களை பாதுகாக்கும் என்றும், இந்த செயலி மூலம் குற்றவாளி ஒருவரை காவல்துறை பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். காவலன் செயலியை ஒரே நாளில் ஒரு லட்சம் பெண்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post