பெட்ரோல், டீசல் இலவசம்… ஆனால், பொருளாதாரத்தில் மந்தம்… எந்த நாடு தெரியுமா?

சர்வதேசப் பெட்ரோலிய வர்த்தகம் உலகெங்கும் அமெரிக்க டாலரில்தான் நடக்கின்றது – என்றாலும், உலக நாடுகள் அனைத்திலும் பெட்ரோல், டீசலின் விலை ஒன்றாக இருப்பது இல்லை.

இந்தியாவில் பெட்ரோலின் விலை 76 ரூபாய் என்றால், கியூபாவில் 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எந்தெந்த நாடுகளில் பெட்ரோலியக் கனிம வளம் உள்ளதோ அங்கெல்லாம் பெட்ரோல், டீசல் மிக மலிவான விலையில் விற்கப்படுகின்றது.

உலகில் உள்ள நாடுகளில் ஒரே ஒரு நாட்டில் மட்டுமே பெட்ரோல், டீசல் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றது. அந்த நாடு வெனிசுலா!. ஆனால் இந்த இலவச பெட்ரோலால் அந்நாட்டு மக்களின் வாழ்வு எந்த வகையிலும் மேம்படவில்லை – என்பதுதான் ஆச்சர்யமான உண்மை!.

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பெட்ரோலிய வளம் இருப்பது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா வெனிசுலாவின் மிக அருகேயே இருந்ததால், வெனிசுலாவின் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பெட்ரோலை மிக மலிவாக ஏற்றுமதி செய்து லாபத்தில் கொழித்தன. ஆனால் அதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கு எந்த வளர்ச்சியும் கிடைக்கவில்லை.

1980-களில் பெட்ரோல் விலை அதலபாதாளத்திற்கு விழுந்தது. இதனால் வெனிசுலாவின் பொருளாதாரம் பெருமளவில் சீர்குலைந்தது. 1995ல் நாட்டின் வறுமை 66% சதவிகிதமாக இருந்தது. பணவீக்கம் 100% ஆக இருந்தது. இத்தனைக் காலம் பெட்ரோல் விற்பனையில் பணம் பார்த்தவர்கள் இப்போது நாட்டுக்கு உதவவில்லை.

அதனால், பெட்ரோலிய வளத்தை அரசுடைமையாக்குவேன் – என்று அறிவித்த தீவிர இடதுசாரியான ஊகோ சாவேஸை வெனிசுலா மக்கள் 1999ஆம் ஆண்டில் அதிபராக்கினார்கள். வறுமை மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை சாவேஸ் வெகுவாகக் குறைத்தார். ஆனால் அவராலும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைத்தன்மைக்குக் கொண்டுவர முடியவில்லை.

சாவேஸ் தொழில் அதிபர்களிடம் இருந்த நிறுவனங்களை அமைச்சர்களிடம் கொடுக்க, அவர்களோ ஊழலில் திளைத்தார்கள். சாவேஸின் 14 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பின்னர், அவரின் மறைவை அடுத்து துணை அதிபர் மதுரோ தேர்தலில் வென்று அதிபரானார். அவராலும் பொருளாதாரத்தைச் சீர்படுத்த முடியவில்லை.

இப்போது உலகின் மிக அதிக வறுமையும், பணவீக்கமும் உடைய நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது!. வெனிசுலாவில் ஒரு முட்டையை வாங்க வேண்டுமானால் நீங்கள் 40 கட்டுப் பணம் கொடுக்க வேண்டும்!. 20 மணி நேரம் வரையிலான மின் தடை அங்கு சர்வ சாதாரணம். இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வெனிசுலா மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

சில நாடுகளில் மூலப் பொருட்கள் கிடைத்தாலும் அவற்றைப் பயன்படுத்தி வளர முடியாத நிலையை வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தி, அந்தநாட்டை ஏழ்மையாகவே வைத்திருக்கும். இது பொருளாதாரத்தில் ’மூலப்பொருள் சாபம்’ என்று அழைக்கப்படுகின்றது!.

பெட்ரோல் விலை உச்சத்தில் உள்ள நாடான ஹாங்காங் கடந்த ஆண்டின் ’பொருளாதாரப் போட்டித்திறன்’ மிக்க நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

Exit mobile version