17 ஆண்டுகளாகப் படகு மூலம் ஆற்றைக் கடந்து சென்று, மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது குன்னத்து மலை. மலை வாழ் மக்கள் வாழும் இந்தப் பகுதி நெய்யாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளால் பிரிக்கப்பட்டு உள்ளது. தென்மலை என்று அழைக்கப்படும் குன்றத்து மலையில் 11 ஊர்கள் உள்ளன. அந்த ஊரில் உள்ள மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக நான்காம் வகுப்பு வரை ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே கொண்டு செயல்படும் பள்ளியைக் கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பள்ளியில் 2002ஆம் ஆண்டு முதல் உஷா குமாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். 51 வயதாகிய உஷாகுமாரி கடந்த 17 ஆண்டுகளாகப் படகில் சென்று குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து வருகிறார். நெய்யாறு அணையைக் கடந்து செல்ல உஷாகுமாரிக்கு ஊராட்சி சார்பில் ஒரு படகு விடப்பட்டுள்ளது. இந்த படகை இயக்குவதற்கு ஒரு பணியாளரையும் நியமித்துள்ளது. காலை ஏழரை மணிக்கு வீட்டில் இருந்து பள்ளிக்குப் புறப்படும் உஷா, படகுக்கு உதவியாகத் துடுப்பு போட்டு அக்கரைக்குச் செல்கிறார்.
பின்னர் கரைக்குச் செல்லும்உஷா அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பாதையில் நடந்தே பள்ளிக்குச் செல்கிறார். செல்லும் வழியில் மாணவர்களையும் தனது குரலின் மூலம் பள்ளிக்கு அழைக்கிறார். 17 ஆண்டுகளாகப் படகின் மூலம் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் உஷா சுகுமாரிக்கு நீச்சல் தெரியாது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதே தன் நோக்கம் என ஓடிக் கொண்டிருக்கும் உஷா குமாரியைப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post