நடிகர்கள் : ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், அஷ்வின் குமார், வேணு அர்விந்த், அன்புதாசன், அபிஷேக் குமார்.
இயக்கம் : கார்த்திக் சுந்தர், திரைக்கதை : கார்த்திக் சுந்தர், தீபக் சுந்தரராஜன், சஞ்சீவ், வசனம் : தீபக் சுந்தரராஜன். இசை : விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு : கிருபாகரன்.
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பெல்லி சோப்புலு’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் பதிப்பாக உருவாகியுள்ளது ‘ஓ மணப்பெண்ணே.’ தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கியிருந்த தெலுங்கு படத்தில், விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிச்சிருந்தாங்க. அதே பாத்திரங்கள்ல தமிழில் ஹரிஷ் கல்யாணும், பிரியா பவானி சங்கரும் நடிக்க, கார்த்திக் சுந்தர் இயக்கியிருக்கார்.
‘ஓ மணப்பெண்ணே’ முழுக்க முழுக்க ரொம்பவே கலர்புல்லான ஃபீல்குட் படமா உருவாகிருக்கு. பொறுப்பில்லாத நாயகன் கார்த்திக்கு பொண்ணு பார்க்க குடும்பத்தோட கிளம்பி போறாங்க, கூடவே கார்த்திக்கோட நண்பர்களும். அப்படி ஸ்ருதியோட வீட்டுக்குப் போக, அங்க எதிர்பாராதவிதமா கார்த்திக்கும் ஸ்ருதியும் ஒரே அறையில ரொம்ப நேரமா இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுது. அறையின் கதவு திறக்கப்படுறதுக்குள்ள தங்களோட பழைய காதலையும் கனவுகளையும் இருவரும் பகிர, இறுதியா இரண்டு பேருமே ஒரே அலைவரிசைல வந்து நிக்குறாங்க. அதாவது சாலைகளில் நடமாடும் ‘ஃபுட் டிரக்’ (Food Truck) பிசினஸ் பண்றதுதான் அது.
திருமணத்துல விருப்பம் இல்லாத நாயகனும் நாயகியும் ‘ஃபுட் டிரக்’ கனவின் மூலமா நண்பர்களாகப் போற நேரத்துல, தவறுதலா ஸ்ருதிய பொண்ணு பார்க்க வந்த விசயம் தெரிய இரண்டு பேருமே பிரிஞ்சுப் போறாங்க.
இடைவேளை வர வேகமாகவும் கலகலப்பாகவும் நகரும் திரைக்கதை, அதன்பின்னால் ரோலர் கோஸ்டர் மாதிரி ஏற்றமும் இரக்கமுமா பயணிக்கிறது. பணக்கார மாமனாருக்கு மருமகனாக ஆசைப்படுற கார்த்திக், ஸ்ருதி கூட பிசினஸ் பண்ணி எல்லார் முன்னாடியும் தலை நிமிர்ந்து நிக்குறார். அதோட எல்லாம் தெளிஞ்சு சரியான நேரத்துல ஸ்ருதியையும் கைபிடிக்கிறார். இந்த திரைக்கதையில் கார்த்திக்காக ஹரிஷ் கல்யாண், ஸ்ருதியாக பிரியா பவனி சங்கர் இவங்க கூட, அஸ்வின் குமார், வேணு அர்விந்த், அன்புதாசன், அபிஷேக் குமார், அனிஷ் குருவில்லா இவங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்காங்க.
கதையும் திரைக்கதையும் கொஞ்சம் வழக்கமான சினிமாவாக முழுமையடைஞ்சிருக்கு. ஒருசில காட்சிகளைத் தவிர மற்ற இடங்கள்ல கதையின் போக்கை ரசிகர்களால முன்னமே கணிக்க முடிகிறது. இந்த குறைகளை தீபக் சுந்தரராஜனோட கலகலப்பான வசனங்கள் மறக்கடிக்க செய்கிறது. ஹரிஷ் கல்யாணோட நண்பர்களா வர்ற அன்புதாசன், அபிஷேக் குமார் படத்துக்கு தேவையான இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் மூலமா பலம் சேர்க்குறாங்க.
ஹரிஷ் கல்யாணோட கடுகடுப்பான அப்பாவா நடிச்சிருக்குற வேணு அரவிந்தும் ரசிக்க வச்சிருக்காரு. சில காட்சிகள்ல அவரோட உடல்மொழியும் முகபாவனைகளும் நடிகர் சிவகுமார கண்முன்னால நிறுத்துது. அதேமாதிரி பிரியா பவானி சங்கரோட அப்பாவ நடிச்சிருக்குற கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தொழிலதிபரா வர்ற அனிஷ் குருவில்லாவும் இருவேறு குணாதிசியங்கள் கொண்ட அப்பாக்களின் முகங்களை நியாபகப்படுத்திருக்காங்க.
ஹரிஷ் கல்யாணுக்கு வழக்கமான பிளேபாய் பாத்திரமா இருந்தாலும்; அவரோட முந்தின படங்கள் மாதிரி இல்லாம பல காட்சிகள்ல அட்டகாசமா ஸ்கோர் பண்ணிருக்கார். இன்னும் கொஞ்சம் புதுமையான பாத்திரங்கள்லயும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சி பண்ணா, தனித்து வலம் வரலாம். பிரியா பவானி சங்கர் நாயகிகளுக்கே உரிய அழகோட, படம் முழுக்க ஆன் ஸ்கிரீன்ல ஸ்மார்ட் பெர்ஃபாமன்ஸ் பண்ணிருக்காங்க. ஆஸ்திரேலியா கனவு, அஸ்வினுடனான காதல் தோல்வி, அப்பாவிடம் பிடிவாதம் செய்வது, பிசினஸ்ல சக்ஸஸ் பண்றதுன்னு கிடைச்ச எல்லா வாய்ப்புகளையும் கெட்டியா புடிச்சிருக்காங்க. அஸ்வினுக்கு பிரியா பவானி சங்கர காதலிச்சிட்டு சூழ்நிலை காரணமா அவர விட்டுட்டுப் போற கேமியோ ரோல் தான். இருந்தாலும் முடிஞ்ச வர்ற தன்னோட கேரக்டர்ல எதிர் நீச்சலடிச்சு பார்த்திருக்காரு.
‘ஓ மணப்பெண்ணே’ படத்துக்கு விஷால் சந்திரசேகரோட பின்னணி இசையும், கிருஷ்ணன் வசந்தோட ஒளிப்பதிவும் ஸ்மார்ட் லுக் கொடுத்திருக்கு. ஃபேண்டசி படத்துக்கான எல்லா கலர்ஸையும் தன்னோட கேமரா மூலமா அவ்வளவு அமர்க்களமா காட்சிப்படுத்தியிருக்கார் கிருஷ்ணன் வசந்த். அதேமாதிரி விஷால் சந்திரசேகரும் ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்கார். கிருபாகரன் தன்னோட எடிட்டிங்ல தயவு தாட்சணியம் இல்லாம கட்டிங் போட்டுருந்தா இரண்டாம் பாதியையும் ரசிச்சிருக்கலாம்.
இயக்குநர் கார்த்திக் சுந்தருக்கு இதுதான் முதல் படம்; ஆனால் அதுவெல்லாம் இல்லாத அளவுக்கு இயக்குநரா அவர் ஆல் பாஸ் ஆகிருக்கார். ரீமேக் இல்லாம நேரடியான தமிழ்ப் படம் இயக்கும் போதே கார்த்திக் சுந்தரோட மற்ற திறமைகளையும் அறிய முடியும். டிவிஸ்ட் இல்லாத திரைக்கதை, வழக்கமான சினிமாத்தனங்கள் என படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஏதோ ஒரு மேஜிக் படத்த முழுக்க ரசிக்க வச்சிருக்கு.
‘ஓ மணப்பெண்ணே’ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாவது கொஞ்சம் ஏமாற்றமே தியேட்டர்களில் வெளியாகிருந்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி ஃபீல்குட் மூவியா ‘ஓ மணப்பெண்ணே’ படத்தை ஒருமுறை நிச்சயமா ரசிக்கலாம்.
– அப்துல் ரஹ்மான்
Discussion about this post