காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண் பெருமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காய்கறிகள், பழங்களை சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைக்கும் வகையில், தோட்டக்கலைத் துறையின் 500 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு ஏதுவாக, வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீத சந்தை கட்டணத்தை 30ம் தேதி வரை செலுத்த தேவையில்லை எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட வரும் 30 ஆம் தேதி வரை கட்டணம் முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்காக உதவும் வகையில், மாவட்ட வாரியாக அவசரகால தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post