புதுச்சேரி மாநிலம் திருபுவனை மற்றும் திருவாண்டார்கோயில் பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலரும் திருவாண்டார்கோயில் ஏரிக்கரை சாலை அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகின்றனர்.
இப்படி வடமாநிலத்தவர்கள் தங்கியிருக்கும் இந்தப் பகுதியில் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து திருபுவனை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மப்டியில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், குறிப்பிட்ட ஒரு வீட்டுக்கு இளைஞர்கள் சென்று வந்ததை கண்டறிந்தனர். உடனே மற்ற போலீசாரையும் வரவழைத்து அந்த வீட்டை ரவுண்டு கட்டி உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சர்பன் குமார் பேஹேரா, மற்றும் தஷ்சரத் பத்ரா ஆகிய இருவரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி கஞ்சா விற்பனைக்காக விட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் கஞ்சா செடியினையும் வளர்ப்பதையும், அந்த இலைகளை பதப்படுத்தி கஞ்சாவாக விற்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
தொடர்ந்து, ஒடிசாவை சேர்ந்த இருவரையும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவையும், தோட்டத்தில் இருந்த கஞ்சா செடியினையும் பறிமுதல் செய்தனர்.
திருவாண்டார்கோயில் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துவந்த இருவரும், விரைவாக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post