இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் துள்ளிய பந்துவீச்சால் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து, 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என 2வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிம் சவுதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
Discussion about this post