கல்வான் பள்ளத்தாக்கில் இன்னுயிர் நீத்த வீரர்களின் தியாகம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நினைவு கூறப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனா இடையே மோதல்போக்கு அதிகரித்து வரும் நிலையில், எல்லைப் பிராந்தியமான லடாக்கில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் எல்லையை காப்பதற்காக இன்னுயிர் நீத்த வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார்.
இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம், இந்தியாவின் வலிமையை உலக நாடுகளுக்கு பறைசாற்றி உள்ளதாக தெரிவித்த மோடி, ராணுவ வீரர்களின் தியாகம் இமயமலை விட உயர்ந்தது என புகழாரம் சூட்டினார்.
ராணுவத்தினரின் உயிர்த் தியாகத்தின் மூலம் இந்தியாவின் தற்சார்பு மேலும் வலிமை அடைந்திருப்பதாக தெரிவித்த அவர், நாட்டின் மூலை முடுக்கெங்கும் ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம்தான் எதிரொலித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாரத மாதாவின் எதிரிகள் இந்திய துருப்புகளின் வீரத்தை கண்டு வாயடைத்து போயிருக்கிறார்கள் என பெருமிதம் தெரிவித்த பிரதமர், சக்கராயுதத்துடன் இருக்கும் கிருஷ்ணரை வணங்கும் நாம், அவருடைய சக்ராயுதத்தையும் பிரயோகிக்க முடியுமென்பதை உலகிற்கு காட்டியுள்ளோம் என்றார்.
தற்போதுள்ள உலகில், நாடு பிடிக்கும் கொள்கையை யாரும் ஆதரிப்பதில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மாறாக வளர்ச்சியை இலக்காக கொண்டே பல நாடுகளும் செயல்படுகின்றன என குறிப்பிட்டார்.
இந்த உரையில் ஒரு இடத்தில் கூட சீனாவின் பெயரை பிரதமர் உச்சரிக்காததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால் அதேநேரம் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் பிரதமர் பொறுப்பாக உரையாற்றி இருக்கிறார் என்று வெளி விவகாரத்துறை நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், திருக்குறளையும் சுட்டிக்காட்டிப் பேசினார். படைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” என்ற குறளை உச்சரித்த பிரதமர், அதற்கான விளக்கத்தையும் ஹிந்தி மொழியில் அளித்தார்.
Discussion about this post