வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அனைத்துத் துறையினரும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மழைநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நவீன ஆம்பிபியன் மற்றும் ரொபாட்டிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், மழைநீர் வடிகால்கள், தெரு விளக்குகள், பள்ளிக்கட்டடங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். சேதமடைந்த மழைநீர் வடிகால்களை உடனடியாகப் பழுதுபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால்களுக்கு இடையே உள்ள இணைப்புகளைச் சரி செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
நீர்நிலைகளில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட வேண்டும். அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, குடிநீர் வாரியம், மின்சாரத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றத் தேவையான இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.தொற்று நோய் பரவாமல் இருக்கப் பூச்சி மருந்துகள், குளோரின் போன்றவை தெளித்தல் வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரமும் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
இதனிடையே பருவமழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்குகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற ஊர்காவல்படையினர் நூறு பேர் பொதுமக்களில் 100 பேர் என 200 பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டு அவர்களுக்கு 17 கருவிகள் அடங்கிய மீட்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்கான பயிற்சியில் அதிகளவு பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
Discussion about this post