சென்னை நீலாங்கரை அருகே காப்பகத்தில் கொத்தடிமைகளாக இருந்துவந்த வடமாநில சிறுவர்களை, குழந்தைகள் நல குழும அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணியில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில், இஸ்லாம் மார்க்கம் குறித்த போதனைகளை கற்றுத் தருவதாக கூறி, வடமாநில சிறுவர்கள் 36 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த காப்பகத்தில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு 36 சிறுவர்களை மீட்டு, அரசு அனுமதி பெற்ற செங்கல்பட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் காப்பகத்தின் உரிமையாளர் அன்ஷர் பாஷா அனுமதி பெறாமலேயே கடந்த 9 வருடங்களாக காப்பகத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
மேலும், அங்குள்ள சிறுவர்கள் சரியான கவனிப்பு இல்லாமல், நோய் தொற்றுடன் இருந்ததும், மருத்துவக் குழு பரிசோதனையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காப்பகத்திற்கு சீல் வைத்து, அன்ஷர் பாஷா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post