ஏர்வாடியில் காவி உடை அணிந்து கொண்டு ஊரில் சுற்றி வந்த வேற்று மாநிலத்து இஸ்லாமிய நபரைச் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ்பெற்ற தர்கா உள்ளதால் அங்கு நாள்தோறும் வெளி மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வெளியூர் யாத்திரிகர்கள் வந்து செல்வதால் எளிதில் யாரையும் அடையாளம் காண இயலாத நிலை உள்ளது.
இந்த நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காவி உடை அணிந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சந்தேகத்திற்கிடமான வகையில் ஏர்வாடியில் சுற்றித் திரிந்தார். அவர் பொருட்கள் வாங்கிய ஒவ்வொரு கடையிலும் உருது, மராத்தி, ஹிந்தி என்று பல மொழிகளில் மாறி மாறிப் பேசி வந்தார்.
இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம், சங்லி மாவட்டம் மிராஜ், குருவார் பேட்டை, கிஷான் சவுக்கைச் சேர்ந்த அப்துல் வகாப் என்பது தெரியவந்தது. இவரின் தந்தை பெயர் முனாப் பெபாரி. இவரிடமிருந்து பறிமுதல் செய்த ஆதார் அட்டையில் மகாராஷ்டிரா , சங்லி, மிராஜ், குரு வார் பேட்டை, கிஷான் செளக் ஏ.வஹாப் எனவும், பான் கார்டில் பெபாரி அப்துல் வஹாப் என ஆங்கிலத்தில் பெயரும், ஹிந்தியில் முகவரியும் அச்சிடப்பட்டு உள்ளது.
முஸ்லிம் வாலிபரான இவர் காவி உடை அணிந்து கடந்த சில நாட்களாக தர்ஹா பகுதியில் சுற்றி திரிந்தது குறித்து ஏர்வாடி காவல்துறையினர் கூறுகையில் அவரிடம் உள்ள விலாசம் உண்மைதானா என கண்டறிய மகாராஷ்டிரா காவல்துறையினருக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல், இலங்கை வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளில் ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேசிய பாதுகாப்பு முகமை யினர் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். காவி உடை அணிந்த இஸ்லாமிய வட இந்திய இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடமாடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post