உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இரண்டாவது சனிக்கிழமையான டிசம்பர் 14-ஆம் தேதியன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வேட்புமனுக்களைப் தாக்கல் செய்ய டிசம்பர் 16 ஆம் தேதி கடைசி நாள் என்றும், தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இரண்டாவது சனிக்கிழமையான டிசம்பர் 14-ஆம் தேதியன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அன்றைய தினம் பொது விடுமுறை இல்லை என்பதால் தேர்தல் அலுவலர்கள் அவர்களது அலுவலகங்களில் இருந்து மனுக்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை மாலையுடன் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அனைத்தும் வரும் 17-ஆம் தேதியன்று ஆய்வு செய்யப்படும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வரும் 19-ஆம் தேதி கடைசி நாள் என்றும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post