காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்தி முனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை, இரவு நேரங்களில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதற்றமும் உருவாகியுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சமூக விரோத சக்திகளின் நடவடிக்கையினை ஒழித்திட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், விசாலாட்சி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று கூறியுள்ள அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதிய அளவில் காவல்துறையினர் எண்ணிக்கை இல்லாததும், ரோந்து நடவடிக்கைகள் குறைந்துள்ளதும் இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post