ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து அளிக்கும் 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்களை மத்திய அரசு அண்மையில் அனுப்பியது. பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, கூடுதல் படையினர் அனுப்பப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் தங்கியிருக்கும் அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினரை குவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு காரணங்களுக்காகவே, படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீண் வதந்திகளை நம்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.