தமிழகத்தில் 5வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் வழிமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இம்மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு ஊரடங்கு உத்தரவை அடுத்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு அறிவித்துள்ளபடி அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பெட்ரோல் நிலையங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காலம் முடியும் வரை பெட்ரோல் நிலையங்கள் “SALES PROMOTION” என்ற பெயரில் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post