பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
10ம் வகுப்பு தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, கோவையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும் வரை மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என கூறினார். தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதன்பிறகு இரண்டு வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Discussion about this post