தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கொரோனா ரத்த பரிசோதனை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு நடத்தினார். தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கொரோனா ரத்த பரிசோதனை மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் ரத்தப் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகவும்,138 பேருக்கு 3 பிரிவுகளாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 44 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
Discussion about this post