தனது குழுந்தைகளை மட்டுமே உலகமாக நினைத்து வாழும் தந்தையர்களை கொண்டாடும் தினம் தான் இன்று.அப்பா என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தியாகம் என்ற சொல் தான்.ஏனோ தெரியவில்லை குழந்தையிலிருந்தே உனக்கு பிடித்த ஹீரோ என்று யாராவது கேட்டால் அனைவரும் சொல்லும் வார்த்தை அப்பா என்று தான்.நாம் அறியாத வயதில் சொன்ன வார்த்தை நாளடைவில் உண்மையாகவே மாறிவிட்டது.
’உனக்காக அப்பா இருக்கிறேன்’ என்ற கூறும் அப்பாவின் வார்த்தை கத்தியை விட ஆழமாக நாம் மனதில் பதிந்திவிடும்.அதனால் நாம் செய்யும் செயல்களில் சிறிதும் அச்சத்தினை காட்டுவதில்லை.வெற்றி பெற்றால் அனைவரும் கட்டி அனைத்து பாராட்டுவார்கள், ஆனால் தோற்றால் நமக்கு தோள் கொடுப்பது தந்தையாக மட்டும் தான் இருப்பார்.
அப்பா-மகளின் உறவு மிகவும் அழகானது,ஆழமானது. ’மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’ என்ற நா.முத்துகுமாரின் வரிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு நல்ல தகப்பனாக இருந்து தன் குழந்தை ஆசைப்பட்ட அனைத்தையும் செய்தே ஆக வேண்டும் என்று முடிவே இல்லாத ஓட்ட பந்தயத்தில் ஓடிக்கொண்டே இருப்பவர்கள் தான் அப்பாக்கள்.
மகள்-அப்பா உறவில் பெரும்பாலும் பிளவுகள் ஏற்படாது.ஆனால் மகன் – அப்பா உறவானது பழாப்பழம் போல தான் .வெளியே இருவரும் கரடு முரடாக பேசிக்கொள்வார்கள்.ஆனால் உள்ளே இருப்பது பழாச்சொலையை போன்ற இனிப்பான அன்பு மட்டுமே.இருவரும் பேசிக்கொள்வதில் தயக்கம், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதில் தயக்கம், இப்படி தயங்கி தயங்கி இறுதியில் அப்பா இல்லை என்ற தருணத்தில் தான் மகன் உணர்கிறான் ’அன்புள்ள அப்பா,அப்பா யாருமே உன் போல் இல்லை மண் மேலே ’.
தன் குழந்தைகளுக்காக வாழ்நாளை அற்பணித்த அப்பாவை நம் வாழ்நாள் முடியும் வரை பார்த்து கொள்ளவேண்டும். உனக்கு நடக்க பழக கற்று கொடுத்தவருக்கு, வயதான பின் அவர் நடப்பதற்கு துணையாக ஒரு குச்சியினை கொடுப்பதற்கு பதிலாக உன் தோளினை கொடுத்தால் அதை விட சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது.
அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..
Discussion about this post