நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடுமப்ங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலால் உயிர் சேதங்களை தடுக்க அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் 4 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்ட முதலமைச்சர், புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிதியில் இருந்து தலா 4 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 6 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புயலால் உயிரிழந்த 61 பசுக்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், 5 எருதுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 65 கன்றுகளுக்கு தலா 16 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், உயிரிழந்த 114 ஆடுகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் ஆணையிட்டதாக தெரிவித்துள்ளார்.
நிவர் புயலால் சேதடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ள முதலமைச்சர், சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்குவதை, நிரந்தரமாக தடுக்கும் வகையில், தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பயிர் சேதத்தை முறையாக கணக்கீட்டு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கவும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
Discussion about this post