வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து, இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில், வைர வியாபாரி நிரவ் மோடி மீது சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனமான டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள வீடியோவில், நிரவ் மோடியின் சொகுசு வாழ்க்கை அம்பலமாகியுள்ளது. நிரவ் மோடி சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவில், மாத வாடகையாக 13 லட்சம் ரூபாய் கொடுத்து வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும், சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி, சர்வ சாதாரணமாக தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு, சொகுசு பங்களாவில் இருந்து அருகில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு சென்று வருகிறார். நீங்கள் லண்டனில் அடைக்கலம் புகுந்து உள்ளீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்ல நிரவ் மோடி மறுக்கிறார்.
Discussion about this post